# தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கர்

ஆறாம் வகுப்பு சமச்சீர்க்கல்வி 
தமிழ்ப் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட  TNPSC & TET தேர்விற்கான மிக முக்கிய குறிப்பு
தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம், வாஞ்சிநாதன், திருப்பூர்க் குமரன் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். இவர்களுள் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கர்.

பிறப்பும் வளர்ப்பும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்கர்.

இவருடைய தந்தையார் உக்கிர பாண்டியனார், தாயார் இந்திராணி அம்மையார்.


இவர் அன்னையை இளமையிலே இழந்தார். முத்துராமலிங்கருக்கு இசுலாமியப் பெண்மணி ஒருவர் தாயாகிப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியாரின் அன்பணைப்பில் இவர் வளர்ந்தார்.

பாட்டியின் வீட்டில் வளர்ந்த நாள்களில் இவருக்குக் கற்பித்த ஆசிரியர் குறைவற வாசித்தான் என்பவர் ஆவார்.
--> பள்ளிக்கல்வி
முத்துராமலிங்கர் தம் தொடக்கக் கல்வியைக் கமுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கிறித்தவப் பாதிரியார்களிடம் பெற்றார்; பசுமலை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பயின்றார். பின்னர், இவர் ஐக்கியக் கிறித்தவப் பள்ளியில் படித்தார்; இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார்.

பல்துறை அறிவு
சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியனவற்றைக் கற்றறிந்தார்; இளமையிலேயே அரசியலில் ஆர்வங்கொண்டார்.
--> பொதுத்தொண்டில் நாட்டம்
இவர் முப்பத்திரண்டு சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுத தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்தார்.

இவர் நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்ற வீரர் ஆவார்; சமபந்தி முறைக்கும் ஊக்கமளித்த பெருமகனாவார்.

இவர் காலத்தில் ஆங்கில அரசு, குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றி மக்களுள் சிலரை ஒதுக்கி வைத்திருந்தது; அவ்வினத்தின் துயர் களைய அரும்பாடுபட்டார்; அவர்களுடைய வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார்; அதனால், குற்றப் பரம்பரையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்தார்.

“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மிகத்திற்கும் இல்லை” எனச் சாதியைப் பற்றிக் கூறியுள்ளார்.

வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைத் தம் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டார்; தமிழகத்தின் சிங்கமானார்.

விடுதலைப்போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வடஇந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது.

‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு. வி. கலியாண சுந்தரனார் இவரைப் பாராட்டியுள்ளார்.

‘சுதந்தரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்; கண்ணீரால் காத்தோம்’ என்பது பாரதி வாக்கு. அரசியல் வாழ்க்கை தேர்தலில் போட்டியிட்ட ஐந்துமுறையும் வெற்றிவாகையே சூடினார். 1937, 1946, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இவர் பெற்றிருந்த மக்கட்செல்வாக்கைக் காட்டின. 

தெய்வீகம், தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்ணாகப் போற்றியவர் பசும்பொன்னார்.

இவர், ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என எடுத்துரைத்தவர்.
வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறாகப் பாராட்டப் பெற்றவர்.

-->

No comments:

Post a Comment