# வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல!

இயற்கையாக எல்லா மனிதர்களுக்கும் தான் சாதனையாளர்களாக வரவேண்டும் என விரும்புவதும், சாதிக்க வேண்டும் என்ற ஆவலும் பொதுவானது. சிலர் தங்களுடைய ஆவலை, பூர்த்தி செய்ய முடிவதில்லை. காரணம், ஒன்றை சாதிக்க தேவையான கஷ்டங்களை அனுபவிக்க அவர்கள் விரும்புவது இல்லை. சிலர் சாதித்து வெற்றி பெற காரணம் அவர்களிடமுள்ள கடுமையான உழைப்பும், சோதனைகளைத் தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம், சில இழப்புகளை எதிர்கொள்கிற மன உறுதியும் இருப்பதால் தான் அவர்கள் சாதனையாளர்களாக ஆக முடிகிறது.
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என வரையறுக்கிறது வள்ளுவம்.

பொதுவாக மனிதர்கள் ஒரு செயலை செய்யும் அணுகுமுறையைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் ஒரு குறிக்கோளை நோக்கி வேகமாக துவங்கி, உற்சாகமாக ஆரம்பித்து, இடையிலே தொய்வு ஏற்பட்டு, வேகம் குறைந்து வெற்றி வாய்ப்பை இழக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், யோசித்து எண்ணி முடிவெடுத்தாலும் செயலைத் தொடங்கிய பின்பு அதே வேகத்தில் அதே ஈடுபாட்டுடன் குறையாத மன உறுதியுடன் தெளிவாக அடி மேல் அடி வைத்து வெற்றி பெறுகிறார்கள். குறுக்கு வழியிலே வெற்றி பெறுவது நிலையானதல்ல.

மிகப்பெரிய வெற்றிகளெல்லாம் பொறுமையான அணுகுமுறையினால் அமைகிறது. ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லும் போது தோல்விகளும், இடர்பாடுகளும் வரலாம். மனிதனுடைய வாழ்விலே எல்லோருக்கும் தவறுகள் ஏற்படுவது இயல்பு. தவறுகள் ஏன் உண்டாகிறது என்று தெரிந்துகொண்டால் அதை தவிர்ப்பது எளிதாகும். தன்னிடம் உள்ள பலவீனத்தை அடையாளம் கண்டுகொண்டால் அந்தப் பலவீனத்தை பலமுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும்.

ஒரு செயலைச் செய்யும் போது இடையில் ஏற்பட்ட தவறுகளை யாரும் கணக்கிடுவதில்லை. அந்த செயலின் இறுதியில் ஏற்படும் வெற்றி தான் கணக்கிடப்படுகிறது. இடையில் ஏற்பட்ட தோல்விகளும் தவறுகளும் அவனுக்கு அனுபவத்தையும், பக்குவத்தையும், பொறுமையையும் புகட்டுகின்றன. அதனால் தவறுகளையும் தோல்விகளையும் கண்டு துவண்டு விடக்கூடாது.

வெற்றி என்பது விலைகொடுத்து வாங்கும் கடைச் சரக்கு அல்ல. ஒரு குறிக்கோள், அதை அடைய திட்டமிடல், குறிக்கோளை நோக்கி முன்னேறுகிற ஈடுபாடு ஆகியவை நன்றாக இருந்தாலும் கூட முயற்சி செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. ஒவ்வொரு படியாகத் தான் வெற்றியை அடைய முடியும். ஒரு சிறு தொடக்கம் தான் ஒரு நல்ல முடிவாக அமையும்.
எடிசன் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி. அவரும் அவருடைய நண்பரும் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பலமுறை தோல்வி அடைந்தனர். அவர் நண்பர் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விட்டுவிடலாம் என நினைத்தார். ஆனால் எடிசன் தளர்ந்து விடவில்லை. அதற்குப் பதிலாக நூறு முறையும் நான் தோல்வி அடையவில்லை ஒவ்வொரு முறையும் நான் எதை செய்யக்கூடாது என்ற படிப்பினையைப் பெற்றேன் என்று கூறினார்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற