# தெலுங்கானா வரலாறும் போராட்டமும்

தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம்  முதல் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள் மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12 மதராஸ் மாநிலத்திலும் இருந்தன. 
ஹைதராபாத் நிஜாம் ஓட்டம்:
இன்றைய ஆந்திரா என்பது மொழியால் பொதுவானது என்றாலும் மூன்று பிரிவானது, ராயலசீமா எனப்படும் பழைய மதராஸ் மாநிலத்தில் இருந்த தென் மாவட்டங்கள். ஆந்திரா எனப்படும்  கிழக்கு கடற்கரை ஓர மாவட்டங்கள் மற்றும் மத்தியில் இருந்த ஹைதராபாத் அல்லது தெலுங்கனா எனப்படும் பழைய ஹைதராபாத் மாநிலம்.
இதில் ஹைதராபாத் மாநிலம் என்பது சுதந்திரத்திற்கு பின்னரும் தனி நாடாக இருந்தது. அதன் மன்னன் ஒஸ்மான் அலி கான். அதற்கென தனி சட்டம், மொழி (ஆமாம் உருது! இன்றும் இது அதிக மக்களால் பேசப்படுவது), ராணுவம், நாணயம், ரெயில்வே, போஸ்டல் ஸ்டாம்ப் என இருந்தன. 1948 ம் வருடம் செப்டம்பர் 17 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. வல்லபாய் பட்டேல் அவர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த அரசர் துருக்கி நாட்டுக்கு தப்பி ஓடினார்.
ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு இறப்பு :
பிரச்சனை இந்த மனிதரின் இறப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. 1952 அக்டோபர் மாதம் ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு, ஆந்திர ராஷ்டிர என்ற மொழிவாரி மாநிலம் கோரி 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இதற்கு பின்னர் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அப்போதைய மத்திய அரசு 1953 அக்டோபர் 1 அன்று இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரதேசை உருவாக்கியது. இதன் தலை நகராக கர்னூல் இருந்தது. ஆனாலும் தெலுங்கானா பகுதி இணையாமல் இருந்தது. பின்னர் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மாநில மறு சீராய்வு கமிட்டி-ன் பரிந்துரைப்படியும், தெலுங்கானா தலைவர்கள் மற்றும் ஆந்திரா தலைவர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தெலுங்கானா பகுதி ஆந்திரா மாநிலத்துடன் இணைந்தது.

நீதிபதியின் கருத்து  மற்றும் ஒப்பந்தம்:
அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பாசல் அலி அவர்கள் தெலுங்கானா தனியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பினால் மற்றும் சட்டசபையின் 3ல் 2பங்கு ஆதரவுடன் ஆந்திராவுடன் இணையலாம் எனவும் இணைப்புக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தன்னுடைய கருத்துக்களை கூறினார்:
ஆதரவான கருத்துக்கள்:
1.  ஆந்திர பகுதி, ஹைதராபாத் பகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உபயோகப்படுதுவதன் மூலம் அதன் தலை நகர (கர்நூல்) பிரச்சனைக்கு தீர்வு காணலாம்
2. கனிம மற்றும் வேளாண் வளங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் சீரான வளர்ச்சி காணலாம்.
எதிர் கருத்துக்கள்:
1. வளர்ச்சியில் சரி சமம் இல்லா பகுதிகளை இணைப்பது கூடாது 
2. ஆந்திரா பற்றாக்குறை நிதியிலும், ஹைதராபாத் மிகுதி நிதியிலும் உள்ளவை. இந்த பகுதிகளை இணைப்பது ஆபத்தானது 
3. தெலுகு ஆட்சி மொழி ஆவதன் மூலம் தெலுங்கானா மக்கள் பாதிப்படைவர். * அங்கு பலகாலமாக உருது ஆட்சி மொழி
4. தெலுங்கானா மலை சார் பகுதி ஆனால் ஆந்திரா சம தள பகுதி, எனவே தண்ணீர் பங்கீடு பிரச்சனை வர வாய்ப்புள்ளது 
இரு பகுதிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துக்கள் கீழே :
1. ஒரு பகுதியை சார்ந்தவர் முதலமைச்சர் பதவியில் இருந்தால் மற்றொரு பகுதியை சேர்ந்தவர் துணை முதல்வர் ஆக வேண்டும் மற்றும் முக்கிய துறைகளில் ஏதேனும் இரண்டு தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கப்படவேண்டும்.(சஞ்சீவ ரெட்டி காலத்தில் துணை முதல்வர் பதவி ஒழிக்கப்பட்டது)
2. மது விலக்கு ஆந்திரா பகுதிக்கு மட்டும். (தெலுங்கானாவில் மது விற்ற பணம் ஆந்திராவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது)
3. நிர்வாக செலவுகள் 2:1 (ஆந்திரா : தெலுங்கானா) என்ற அளவில் பிரிப்பு ( ஆந்திரா தெலுங்கானா பணத்தை உபயோகித்தது)
4. வேலைவாய்ப்பு - மக்கள் தொகை அடிப்படையில்
5. தெலுங்கானா பகுதியில் 12 வருடங்களுக்கு மேல் வசிப்பவருக்கே வேலை  (இது பின்பு 4 வருடம் என ஆனது )
6. ஆந்திரா பகுதி மக்கள் தெலுங்கானா பகுதியில் விவசாய நிலங்களை வாங்க முடியாது 
இந்த ஒப்பந்தத்தின் நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
முதல் போராட்டம் :
1969 ம் ஆண்டு தெலுங்கானா பகுதி மாணவர்கள் மொழிப்பிரச்சனை மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக போராட்டம் நடத்தினர். ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போராட்ட களமாக இருந்தது.  மர்ரி சன்னா ரெட்டி தலைமை தாங்கி நடத்தினார். "ஜெய் தெலுங்கானா" என்று முழங்கிய இவர், இந்திரா காந்தியின் அரசியலில் சிக்கி தன்னுடைய தெலுங்கானா பிரஜா சமிதி கட்சியை காங்கிரசுடன் இணைத்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இந்த போராட்டத்தில் உயிரழந்த மாணவர்களின் எண்ணிக்கை 350க்கு மேல் இருக்கும். இவருக்கு அடுத்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த நரசிம்ம ராவ் (சிரிக்காத பிரதமர் தான்) அவர்களும் முதலமைச்சர் ஆக்கப்பட்டு போராட்ட வேகம் தணிக்கப்பட்டது. இது மறுபடியும் அரசியலாக்கப்பட்டது 90 களில் தான்.

சந்திரசேகர ராவ்:
தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான இவரே அடுத்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். ஆனால் இந்த முறை தன்னுடைய சுய லாபத்துக்காக. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர், 1999 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த இவருக்கு துணை சபா நாயகர் பதவி கிடைத்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர் 2001ல் அந்த கட்சியை விட்டு வெளியேறி ஆரம்பித்ததுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி. தனி மாநில கொள்கைக்கு வித்தியாசமாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்கு தேசம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் சந்திர சேகர ராவ் தொடக்கி வைத்த உண்ணா விரத போராட்டங்கள், மாணவர்களின் தொடர்ச்சிப்போராட்டங்கள் மற்றும் சில தற்கொலைகளின் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த தெலுங்கானா மாநிலம் தற்போது வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆந்திரா பகுதியினர் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர். ஏனென்றால் ஹைதராபாத் நகரமே தெலுங்கானா பகுதியில் தான் உள்ளது. தெலுங்கானாவுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் ஹைதராபாத் பொதுவான தலை நகராக அடுத்த 10 வருடங்க்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

Read more & download pdf file

3 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற