# திராவிட மொழிகள்

தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது, மொழி.

உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள், தனக்கெனத் தனிச்சிறப்பும் பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழியே மூலமொழி.

இந்தியமொழிக் குடும்பங்கள்
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும், இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ- ஆசிய மொழிகள், சீன - திபெத்திய மொழிகள் என மொழியியல் அறிஞர் நான்கு மொழிக்குடும்பங்களுள் அடக்குவர்.


நம் நாட்டில் ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்படுகின்றன. ஆதலால், இந்திய நாட்டை, ‘மொழிகளின்காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் குறிப்பிட்டுள்ளார் மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

திராவிடமொழிக் குடும்பங்கள்
இன்று இருபத்து மூன்றனுக்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் உள்ளன.
இம்மொழிகளைத் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூவகையாகப் பிரிப்பர்.
இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் எனப்படும்.
தென்திராவிட மொழிகள் :
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா.
நடுத்திராவிட மொழிகள் :    
தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, முண்டா.
வடதிராவிட மொழிகள் :
குரூக், மால்தோ, பிராகுய்.
திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. 


திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல், தமது திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

குமரிலபட்டர் திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார்.  கால்டுவெல் அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
மொழியியல் அறிஞர், தொடக்கக் காலத்தில் தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும், தமிளியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று வழங்கினர். அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. எனினும், பல திராவிட மொழிகளுள் தமிழையும் ஒன்றாகக் கொண்டனர். ஆகவே, இவ்வின மொழிகள் அனைத்தையும் இணைத்துத் திராவிட என்னும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கால்டுவெல் கூறியுள்ளார்.

திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானது.
தமிழ் > திரமிள > திரவிட > திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார்.

தமிழ்மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழைமையான நூல் தொல்காப்பியம்.

எண்பது விழுக்காடு அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி, தமிழ்.

தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டுவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே செவ்வியல்மொழி எனப்படும். இவையே செம்மொழிக்கான (Classical Language) கூறுகளாகவும் கருதப்படுகின்றன.

இலெமூரியாக் கண்டம் : கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம்.
யுனெஸ்கோ நிறுவனம், அழிந்து வரும் பண்டைய தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற