வாழை மரம்
இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை
நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல்
சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும்
சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத்
திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி
என்பர்.
வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே
அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப்
புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
பல + பல = பலபல
சில + சில = சிலசில
இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
பல + பல = பலப்பல
சில + சில = சிலச்சில
இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
பல + பல = பற்பல
சில + சில = சிற்சில
இவற்றில்,
நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன.
இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல +
பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிகுந்தும், நிலைமொழி ஈற்றின்
அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும். மேலும், பல, சில
என்னும் சொற்களின் முன், பிற சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப்
புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
பல + கலை = பலகலை ; பல்கலை
பல + சாலை = பலசாலை ; பல்சாலை
பல + தொடை= பலதொடை ; பஃதொடை
பல + மலர் = பலமலர் ; பன்மலர்
பல + நாடு = பலநாடு ; பன்னாடு
பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
சில + மலர் = சிலமலர் ; சின்மலர்
சில + வளை = சிலவளை ; சில்வளை
சில + அணி = சிலவணி ; சில்லணி
இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்இயல்பும், மிகலும், அகரம் ஏகலகரம் றகரம் ஆகலும் பிறவரின்அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
- (நன்னூல் நூற்பா - 170)
(விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
sir this website is very useful to me thank u sir
ReplyDeletehmm welcome
Deleteondraiondru pirithuk kooruga
ReplyDeletethank u sir
ReplyDeletevery beneficiary thank u sir
ReplyDeleteThank You sir, Very useful for my PG TRB Exam
ReplyDelete