ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நகரங்களில் குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.
125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், கணிசமான மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள்.
125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், கணிசமான மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள்.
நகரங்களில் மக்கள் நெருக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசுக்கு பெரும் சவாலான பணியாக உள்ளது.
குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’களாக (திறன்மிகு நகரங்கள்) மாற்றப்போவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, சேலம், திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 நகரங்களும் அடங்கும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. முதல் கட்டமாக, ஸ்மார்ட் சிட்டிகளாக ஆக்கப்பட இருக்கும் 20 நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி வெங்கையா நாயுடு டெல்லியில் அறிவித்தார்.
அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள 97 நகரங்களை தேர்வு செய்து அனுப்பி இருந்தன. இதில் முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
பல்வேறு தரப்பினர் ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலமும் மற்றும் செல்போன் குறுந்தகவல் மூலமும், அத்துடன் உள்ளூர் அளவில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகள் மூலமும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த 20 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டன. அந்த வகையில் இந்த 20 நகரங்களையும் தேர்வு செய்யும் பணியில் நாடு முழுவதும் மொத்தம் 1 கோடியே 52 லட்சம் பேர் பங்கு கொண்டனர்.
இந்த தேர்வு பட்டியலில் முதல் இடத்தை ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரம் பெற்று உள்ளது. ‘ஸ்மாட் சிட்டி’ நகரங்களின் பட்டியலில் புவனேசுவரத்தை சேர்க்கக்கோரி அந்த நகரில் 10 கிலோ மீட்டர் நீள பதாகையுடன் மக்கள் அணிவகுத்து நின்றனர். அதில் அந்த நகரவாசிகள் புவனேசுவரத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதற் கான யோசனைகளை எழுதி இருந்தனர். இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் புனேவுக்கு 2-வது இடமும், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு 3-வது இடமும் கிடைத்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள், திட்ட உத்திகள், ஆக்கபூர்வமான செலவு, தொலைநோக்கு பார்வை, மக்களின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மேற்கண்ட 20 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நகரங்களில் குடிநீர், மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நவீன தெருவிளக்குகள், ஸ்மார்ட் கார்டுடன் கூடிய நவீன பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, அதிவேக இணையதள வசதி, தகவல் பகுப்பாய்வு மையங்கள், நவீன கண்காணிப்பு கேமரா வசதிகள், மின் ஆளுமை ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இதற்காக இந்த 20 நகரங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 50 ஆயிரத்து 802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு நகரத்துக்கும் ஒதுக்கப்படும் தொகையும் மாறுபடும். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு நகரத்தையும் ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் மொத்த செலவு தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், மீதி 50 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு நகரின் மேம்பாட்டுக் காகவும் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.100 கோடி வழங்கும்.
இந்த 20 நகரங்களில் 9 நகரங் களை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் திட்டத்தை நிறைவேற்றும் பணியை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஒன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 2-வது கட்டமாக 2017-ம் ஆண்டில் 40 நகரங்களும், 3-வது கட்டமாக 2018-ம் ஆண்டில் 40 நகரங்களும் தேர்ந்து எடுக்கப்படும். 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் திட்டத்தை 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.96 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
மக்களிடம் கருத்து கேட்டு நகரங்களின் மேம்பாட்டுக்காக பெரிய அளவில் முதலீடு செய்வது உலகிலேயே இதுதான் முதல் தடவை ஆகும்.
ஸ்மார்ட் சிட்டியை தேர்வு செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்று முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்வதற்காக பல்வேறு அமைப்புகளில் விரிவாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் பங்கு கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
it is very useful material i want more group 2 main exam articles.
ReplyDeletethank you sir