தமிழின் முதல் எழுத்து - அ
‘அ’ என்னும் எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. உலகத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளின் முதல் எழுத்தில் இப்படி ஒரு கோடு இருக்கிறது. அ எழுத்து மனிதனைக் குறிக்கிறதாம். | என்னும் முதுகுக்கோடு பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக்
குறிக்கிறதாம்; என்னே, வியப்பான செய்தி!
எழுத்துகளும் மனிதர்களும்
மனிதர்களைப்போலத்தான் எழுத்துகளும். அவற்றுக்குள் நட்பும் உண்டு; இனமும் உண்டு.
இன எழுத்துகள் :
‘ங்’ என்னும் எழுத்துக்குப் பின்னால் ‘க’ இன எழுத்தே வரும். ‘ங்’, ‘க’ இரண்டும்
நண்பர்கள்.
ண்ட, ந்த, ம்ப, ன்ற - எழுத்துகளும் நண்பர்கள். பெரும்பாலும் இவை சேர்ந்தே வரும்.
(எ.கா.) பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
நட்பு எழுத்துகளை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
இன எழுத்துகள் : ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற |
தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்)
எழுத்துகளுக்குள் நட்பு உண்டு என்பதனை அறிந்தோம் அல்லவா?
தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்தோடு மட்டும் சேர்ந்து வரும்.
(எ.கா.) பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
க், ச், த், ப் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும் எழுத்துகள்.
உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் : க், ச், த், ப் |
தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் எழுத்துகள்
(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்)
(எ.கா.) சார்பு, வாழ்க்கை.
ர், ழ் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் சேர்ந்து வாரா. பிற எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
வேற்றுநிலை மெய்ம்மயக்க எழுத்துகள் : ர், ழ் |
தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வரும் எழுத்துகள்
(எ.கா.) ற் - குற்றம், மேற்கு; ன் - அன்னம், அன்பு.
தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வரும் எழுத்துகள் : ற், ன் |
Very useful.. Thanku.. Pls keep it up
ReplyDelete