தமிழ் மகளிரின் சிறப்பு - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேயரின் அடக்குமுறைக் கொடுமைக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிப் போராடினோர் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.

பெற்றோரும் பிறப்பும்:
புதுச்சேரியில் வாழ்ந்த முனுசாமி என்ற நெசவாளி, தில்லையாடி என்னும் ஊரில் பிறந்த மங்களம் என்ற மங்கையை மணந்தார். திருமணத்திற்குப் பின்னர் தில்லையாடியிலேயே அவர்கள் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்கள்.

அந்நாளில், ஆங்கிலேயர் தம் நாட்டுத் துணிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால், நெசவுத்தொழில் பாதிப்பால் வறுமையில் வாடிய முனுசாமி, தம் மனைவியுடன் வேலைதேடித் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினார்.

அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரத்தில் சிறிய அளவில் காய்கறிக் கடை நடத்தினார்.  இந்நிலையில், 1898ஆம் ஆண்டு முனுசாமி, மங்களம்  இணையருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையே வீரமங்கை வள்ளியம்மை ஆவார்.

வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். எனினும், இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக்கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்படுகிறார்.

அறப்போர்:
தென்னாப்பிரிக்க நாட்டின் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்தவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணம் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பு, அங்குக் குடியேறியிருந்த இந்தியர்கள் அனைவருக்கும் எதிராக அமைந்திருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தமது உரிமையை மீட்க அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போராட்டத்தினைக் காந்தியடிகள் தலைமை ஏற்று வழிநடத்தினார். போராட்டத்தின்பொழுது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. காந்தியடிகளின் உரிமை முழக்கத்தினால் கவரப்பட்ட வள்ளியம்மை அறப்போராட்டத்தில் முனைப்புடன் பங்கேற்றார். 1913ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.

வள்ளியம்மைக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தது.

சிறைவாழ்க்கை:
சிறையில் வள்ளியம்மைக்குக் கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது. சிறைச்சாலையில் நோயுடன் உயிருக்குப் போராடிய நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நாட்டுப்பற்று:
உடல்நலம் குன்றிய நிலையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மையைக்  காண காந்தியடிகள் வந்தார்; காய்ச்சல் காரணமாக உடல் மெலிந்து நைந்து கிடந்த வள்ளியம்மையின் நிலைகண்டு கண்கலங்கி நின்றார்.

“சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?”, என்று வள்ளியம்மையிடம் கேட்டார் காந்தியடிகள். 

உடல்நிலை தளர்ந்திருந்த அந்நிலையிலும் வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்வதற்குத் தயார்” என்று கூறினார். அத்துடன், இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன். அதற்காக, என் இன்னுயிரையும் தருவேன் என்று கூறினார். வள்ளியம்மையின் பதிலைக் கேட்டுக் காந்தியடிகள் உள்ளம் நெகிழ்ந்தார். 

உடல்நலம் குன்றிய வள்ளியம்மை 1914 பிப்ரவரி இருபத்திரண்டாம் நாளன்று தமது பதினாறாம் அகவையில் மரணம் அடைந்தார்.
காந்தியடிகளின் கருத்து
“என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.

“மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர்நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து, இந்தியன் ஒப்பீனியன் இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.

தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள், தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி நடுவணரசு, அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிட்டுள்ளது.
தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண்புலிக்குட்டிக்குத் தில்லையாடி வள்ளியம்மை நினைவாக வள்ளி எனப் பெயரிடப் பெற்றுள்ளது.
காந்தியடிகள், தமிழர்மீதும் தமிழ்மொழியின்மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு வள்ளியம்மையும் ஒரு காரணம் என்று கூறலாம்.
காந்தி மேற்கொண்ட சத்தியாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலியாகி, அவரை மகாத்மா என்ற உயர்நிலைநோக்கித் திருப்பிய பெருமை தில்லையாடி வள்ளியம்மைக்கு உண்டு.

அரசு செய்த சிறப்புகள்
வள்ளியம்மையின் நினைவைப் போற்றும்வகையில் தில்லையாடியில் தமிழ்நாடு அரசு அவரது சிலையை நிறுவியுள்ளது.
கோ-ஆப்- டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலுள்ள தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்குத் தில்லையாடி வள்ளியம்மை மாளிகை எனப் பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கர்

2 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற