இந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மாநிலமாகும். மதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.
உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன. அண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது.
இது போன்ற வரி விதிப்பு பிரச்சனைகளை களையவும், ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தவும் மதிப்பு கூட்டு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன .
மதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (Value added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது. இதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் விற்பனை வரியிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக நுகர்வோரை வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை.
இவ்வாறு விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் விலையில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு மறைமுக வரியாகும். முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் ("மதிப்பு கூட்டப்படுதல்") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.
மாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT). இது முன்பிருந்த விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட ஒரு நுகர்வு வரி. பழைய விற்பனை வரி அமைப்பில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி அது வரிச்சுமையினை பெருக்கிவிடுகின்றது. மேலும், உள்ளீடுகள் மீது முதலில் வரி விதிக்கப்படுகிறது, பின்னர் உள்ளீடு வரி சுமையோடு ஒரு பொருள் உற்பத்தியானபிறகு அந்த இறுதிபொருள் மீது மீண்டும் வரி விதிக்கப்படுகின்றது. இது வரிமேல் வரி விதிப்பாகும்.
ஆனால் வாட் இதுபோன்ற குறைகளைத் தவிர்த்து, ஒரு பொருளின் உற்பத்தி/விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்கு கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த வாட் விதிக்கப்படுகின்றது. உதாரணமாக, நீங்கள் ரு. 1,000 மதிப்புள்ள சர்க்கரை (மூலப்பொருள்) வாங்கி அதற்கு 10 % வரிவீதத்தில் ரு. 100 வரியாக செலுத்துகின்றீர்கள். இதை உள்ளீடாகப் பயன்படுத்தி மேலும் ஒரு ஆயிரம் ருபாய் செலவழித்து ஒரு இனிப்பு தயாரிக்கின்றீர்கள் எனக்கொள்வோம். இப்போது நீங்கள் தயாரித்த இனிப்பின் மதிப்பு ரு. 2000; இதை நீங்கள் விற்கும்போது ரு. 200 (10 % of Rs. 2000) வரியாக பெறுவீர்கள். இதில் நீங்கள் ரு. 100 வைத்துக்கொண்டு மீதமுள்ள ரு. 100 மட்டும் அரசுக்கு வரியாக செலுத்தினால் போதும்; காரணம் நீங்கள் சர்க்கரை வாங்கும்போது அதற்கான வரி ரு. 100யை முன்பே செலுத்திவிட்டீர்கள். ஆக, ரூ 2,000 மதிப்புள்ள பொருளின் மீதான வரி ரூ.200 (100 சர்க்கரை மீதும்+ 100 இனிப்பின் மீதும்) கிடைத்துவிட்டது.
இதுவே முன்னர் இருந்த விற்பனை வரி முறையில் பொருளின் மதிப்பு ரூ. 2,100 என்று கணக்கிடப்படும் (ரூ. 1,000 சர்க்கரை மதிப்பு, ரூ 100 சர்க்கரை மீதான வரி, ரூ. 1,000 இனிப்பு மதிப்பு). இதன் மீது வரி ரூ 210 வசூலிக்கப்படும். ஆக மொத்த வரி வசூல் ரூ310 (100+210). இதனால் பொருளின் விலை மிக அதிகமாகும்.
நாடுமுழுக்க 2005 இல் இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2007 இல் அமுல் செய்யப்பட்டது. அடிப்படையில் 4 %, 12.5 % என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டும் கொண்டது வாட். தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கு 1 % இம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் மற்ற வகைகளாகும். தற்போது, வாட்டின் வளர்ச்சி விகிதம் விற்பனை வரியின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகரித்துள்ளது.
- TNPSC General Tamil Study Materials free download
- Samacheer Kalvi 10th to 12th Tamil Study Materials & Model Question Paper
- +2, +1, 10th Tamil Questions - Test Paper for TNPSC Exam
- +2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams
- Tamil ilakkiya Varalaru-e-book pdf free download
- Tamil ilakkiya Varalaaru Model Test Paper
- TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper with answer key
- TNPSC New Syllabus Tamil Model Question Papers
- TNPSC General Tamil - Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)
- Arivu TNPSC Model Question Paper with Answerkey
- அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
- Group 4 Model Question Paper
- Tamil ilakkiya varalaru online Test
No comments :
Post a Comment