உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு கண்ணோட்டம்

 தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோலாலம்பூரில் 1966ல் நடந்த முதல் உலக தமிழ் மாநாடு, பாரிஸ் நகரில் 1970ல் நடந்த மூன்றாவது மாநாடு, யாழ்ப்பாணத்தில் 1974ல் நடந்த நான்காவது மாநாடு, மதுரையில் 1981ல் நடந்த ஐந்தாவது மாநாடு, மொரிசியஸில் 1989ல் நடந்த ஏழாவது மாநாடு, தஞ்சையில் 1995 ல் நடந்த எட்டாவது மாநாட்டுடன் அண்ணா நடத்திய இரண்டாவது மாநாட்டினை ஒப்பிடும்போது மற்றவை அனைத்தும் சாதாரண அளவிலேயே அமைந்திருந்தன.

தமிழ் மொழியை செம்மொழி என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சியினால் அந்த அறிவிப்பினை பெற்றிருப்பதோடு, சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பதோடு நாடு முழுவதும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு ஜனாதிபதியின் “குறள்பீட விருது’,”தொல்காப்பியர் விருது’ வழங்க வழிவகுத்துள்ளது. இந்த வெற்றியின் காரணமாக முதல் உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை தற்போது நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நாம் கருதியதால் கோவை மாநகரில் ஜூன் 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்த முடிவு செய்தோம்.


தமிழ்மொழிக்கு வளமான,தொன்மையான இலக்கிய, இலக்கணப் பாரம்பரியங்கள்,சொந்தமான எழுத்து வடிவம், இடைவிடாத நீண்டகால வரலாறு உள்ளன என்று தமிழ் அறிஞர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்து வந்தனர். தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், பேசும் மொழியாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் சமஸ்கிருதம், பாரசீகம், அரேபிய மொழிகளை செம்மொழிகளாக பாவித்து அம்மொழிகளை கற்கவும், மேம்படுத்தவும் சிறப்பு சலுகைகளையும், ஆதரவு அமைப்புகளையும் உருவாக்கியபோது தமிழுக்கும் செம்மொழி தகுதி அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

அமெரிக்காவின் பெரிக்கெலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்படவேண்டுமென 2000 ஆண்டில் வாதாடினார். இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், “”முதலில் தமிழ்மொழிக்கு கணிசமான பழமை உண்டு. இரண்டாவதாக தோன்றி விரிந்த தமிழ் மொழிக்கு மட்டுமே சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படாத இந்தியாவில் தோன்றி வளர்ந்த இலக்கிய பாரம்பரியம் உண்டு. மூன்றாவதாக செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் தரம் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரேபிய மொழிகளிலுள்ள மாபெரும் இலக்கியங்களுக்கு ஒப்ப நிற்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

திராவிட மொழிக்குடும்பத்தின் உண்மை நிலை, தமிழ்மொழியின் மிகப்பழமை ஆகியவற்றிற்கு எதிராக எழுப்பப்பட்ட சர்ச்சைகளை முறியடித்து, அனைத்து திராவிட மரபு வழக்கத்தொடர்களிலும் தமிழுக்கு மிகவும் உயர்ந்த செழுமை உண்டு என்பதை டாக்டர் ராபர்ட் கால்டுவெல் நிலைநாட்டினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய பரிதிமாற் கலைஞர், தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கவேண்டும் என்ற அறைகூவலை முதல்முதலாக எழுப்பினார். இவரது கருத்துக்கு பிரபலஅறிஞர்களான மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் ஆகியோர் மேலும் செழிப்பூட்டினர். சென்னை பல்கலைக்கழகம் தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1918 ம் ஆண்டு நிறைவேற்றியது. “யுனெஸ்கோ கூரியர்’(தமிழ்) இதழின் ஆசிரியராக பணியாற்றிய மணவை முஸ்தபா 1970ம் ஆண்டுகளில் தமிழ் செம்மொழியாக வேண்டுமென்ற லட்சியத்துக்காக பாடுபட்டார்.

1996ம் ஆண்டு பொதுதேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க., அதன் திருச்சி மாநாட்டில் தமிழ் மொழியை மத்திய அரசின் அதிகாரபூர்வமான மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கை சேர்க்கப்பட்டது. 1998 ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியபோது அந்த அரசில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர்.

தி.மு.க.,தலைமையிலான கூட்டணி தேர்தலில் பெருவெற்றிபெற்று மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் தி.மு.க., முக்கியமானதொரு அங்கம் வகித்ததால் தேசிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இக்கோரிக்கையை சேர்க்க நம்மால் முடிந்தது. 2004 ஜூன் மாதம் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அன்றைய ஜனாதிபதியும், தமிழ் அறிஞருமான அப்துல் கலாம், தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்தது வெறும் அடையாள பூர்வமானது மட்டுமல்ல. அது இந்திய ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி அரசியலுக்கும் கிடைத்த வெற்றியும் ஆகும். 2004 அக்டோபர் 24 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது.இதனால் சுதந்திர இந்திய அரசினால் அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி என்ற தனிச்சிறப்பை தமிழ்மொழி பெற்றது.

திருச்சியில் 2006 மார்ச் 5 ல் நடந்த தி.மு.க.,மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா முன்னிலையில் நான், எனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். இந்த முடிவு குறித்து 2005 நவம்பர் 8ல் அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.”"அன்பான திரு.கருணாநிதிஜி அவர்களே, உங்களது அக்டோபர் 28 ந் தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவுற்றுள்ளன என்பதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் சாதனை என்றாலும் கூட, உங்களுக்கும் உங்களது கட்சிக்கும் குறிப்பாக பெருமையாகும். உண்மையுள்ள, சோனியா காந்தி. இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இது கடிதமல்ல. காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு என்று சோனியாவிடம் நான் தெரிவித்தேன்.

தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இலச்சினை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இலச்சினையில் ஏழு குறியீடுகள், சின்னங்கள் இடம்பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். நாட்கள் ஏழு, அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு, திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு எனும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும். 
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக “”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது அமைந்துள்ளது. ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாக கருதத்தக்கது. செம்மொழி மாநாட்டிற்கான மையப்பாடலை நான்(கருணாநிதி) எழுதி, ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அதன் ஒளிக்குறுந்தகடை திரைப்பட இயக்குனர் கவுதம் மேனன் உருவாக்கினார். 2010 ஜூன் 23 அன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைப்பார். எனது தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக கவர்னர் சுர்ஜித் பர்னாலா மற்றும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், டாக்டர் வா.செ.குழந்தை சாமி, டாக்டர் க.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் பங்கேற்பர்.

“கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ உலகப்புகழ் பெற்ற இந்தியவியல் அறிஞர் பின்லாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் அஸ்கோ பர்போலாவிற்கு வழங்கப்படும். மாநாட்டில் பங்கேற்க 49 நாடுகளிலிருந்து 1020 பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் 55 தலைப்புகளில் பல்வேறு பொருள் குறித்து ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிப்பர். பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பொது அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இசை, நாட்டியம் மாலை வேளைகளில் நடைபெறும். சிந்துசமவெளியில் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான பொருட்கள், சோழர்கள் மற்றும் பல்வேறு காலங்களை சார்ந்த செப்பு, கல்வெட்டுகள், சிலைகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெறும்.

மாநாட்டு துவக்க நாளான ஜூன் 23 அன்று அலங்கார ஊர்திகள் இடம்பெறும் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறும். தமிழ் இணைய மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து சுமார் 350 சிறப்பு அழைப்பாளர்கள், பேச்சாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் மொழியை அதன் தேவைக்கு ஏற்பவும், இதர அறிவுசார் துறைகளில் துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த மாநாடு 21 ம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

- முதல்வர் கருணாநிதி ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் சுருக்கம்.   Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. 
உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற